சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 126 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் மூலம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளை விட வலுவான தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா ஒரு உலகத்தொற்று. இதில் இருந்து முழுமையாக வெளியில் வந்து விட்டோம் என்று சொல்லமுடியாது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 1 லட்சம் என்ற கணக்கில் தினமும் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் மட்டும் பாதிப்பானது சற்று அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் 500 நபர்களுக்குக்கீழ் தான் கரோனா பாதிப்பு உள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
மேலும், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்கிறது. அதன்பின்னர் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளும் சூழல் இருப்பதால், மக்கள் தற்போதே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெற்று வந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு. யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். அவசியம் அறிந்து வழங்க வேண்டும். இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மருத்துவத்துறை சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தது. தற்போது சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி உட்பட சர்வதேச போட்டிகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை முழு ஒத்துழைப்பு வழங்கும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பின் போது உதவி இயக்குனரை தாக்கிய ஹீரோ