சென்னை: புதியதாக பொறுப்பேற்கும் அரசிற்கு தலைமை ஏற்கும் முதலமைச்சர், தான் பொறுப் பேற்றவுடன், 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு" அமைக்கும் அரசாணைக்கு வழி செய்யும் வகையில் முதல் கையெழுத்து போட வேண்டும் என என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று (ஏப்.14) சென்னையில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கிற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமைத் தாங்கினார். இந்த கருத்தரங்கில் முன்னாள் துணைவேந்தர் ஜவகர் நேசன், தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
விடுதலை இந்தியாவிற்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்க நடைபெற்ற விவாதத்தில், குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக வழங்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. அசல் பிரிவு 45, அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளில் 14 வயதிற்கு உள்பட்ட அனைவருக்கும் கட்டணமில்லாக் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வழிகாட்டியது.
தமிழ்நாட்டை பின்பற்றும் பிறமாநிலங்கள்
பிரிவு 41 மிகத் தெளிவாக அரசின் பொருளாதார நிலையைப் பொருத்து, கல்வியை உரிமையாக வழங்கிட வேண்டும் என்று கூறுகிறது. இந்திய அரசோ, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மாநில அரசுகளோ இதை முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்திய அரசால், 1968இல் அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கைையை தமிழ்நாடு அரசு, 12ஆம் வகுப்புகளைப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அறிமுகப்படுத்தியது.
உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தகுதி உயர்த்தப்பட்டன. அதன் விளைவாக, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும் 12 படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது. இதன்பலனால் இந்திய சராசரியை விட இரண்டு மடங்காக, உயர் கல்வியில் 50 சதவீதம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கைத் தமிழ்நாடு 2020ல் அடைந்தது. தமிழ்நாடு அரசால், மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான வசதிகள், விலையில்லாக் கல்வி உபகரணங்கள் போன்றவற்றை, இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றி வழங்கி வருகின்றன.
பொதுப்பட்டியலில் கல்வி
இவை அனைத்தும், மாநிலத் தேவை உணர்ந்து ஒரு மாநில அரசால் வகுக்கப்படும், கொள்கையாலும், திட்டத்தாலுமே சாத்தியம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. மத்தியப் பட்டியலில் இல்லை. பல்கலைக்கழக உருவாக்கம், ஒழுங்குபடுத்துதல், கலைத்தல் மாநிலப்பட்டியலில் இடம் பெற்று உள்ளது. மாநிலச் சட்டப்பேரவையின் அதிகார வரம்பிற்கு உள்பட்டது.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டம் இதற்கான வாய்ப்புகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 பல்வேறு வகையான நெருக்கடிகளை அரசு கல்வி நிறுவனங்களுக்கு உருவாக்குகிறது. வணிக வளாகங்களாக, கல்வி நிறுவனங்கள் மாற வழி செய்வதோடு, பள்ளிக்கு வரும் குழந்தைகளை உள்ளுர்திறன் தேவைகளுக்கு ஏற்றார் போல் வேலைத் திறன்களை வளர்த்துக் கொள்ளச் சொல்கிறது.
தீர்மானம்
குழந்தைகள் குழந்தைத் தொழிலாளியாக மாற வழி செய்வதோடு, இதையும் தாண்டி ஒரு குழந்தை 12 முடித்தால், அந்த படிப்பு கல்லூரிக்குச் சேரத் தகுதி இல்லை என்று அறிவிக்கிறது. அதன் பின் அகில இந்திய அளவில் நடத்தப்படும் திறனறி தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தான் கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கிறது.
வேலைத் திறன் பெறுவது தான் கல்வியின் நோக்கமாக மாறி, பள்ளி மற்றும் கல்லூரிகள் வேலைத் திறன் மையங்களாக மாறிட வழி செய்கிறது. இந்த கருத்தரங்கில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி இளவேனில் தீரமானங்களை வாசிக்க, அதனை தூய்மைப் பணியாளர் ஜமுனா முன்மொழிந்தார். அவை,
- குலக் கல்வித் திட்டத்தின் புது வடிவமாக உருவாகியுள்ள தேசியக் கல்விக்கொள்கை 2020யை சமூகநீதியின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, நிராகரிக்க வேண்டும்.
- மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து, சமமான கற்றல் வாய்ப்பு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைவரும் பெற்றிட வழி செய்திட "மாநிலக் கல்விக் கொள்கை"யைத் தமிழ்நாடு அரசு வகுத்திட வேண்டும்.
- கோத்தாரி கல்விக்குழு தொடங்கி முத்துக்குமரன் குழு வரை பொதுப்பள்ளி முறைமையை வலியுறுத்தி உள்ளது. அரசின் பொறுப்பிலும் செலவிலும், அருகமைப்பள்ளி அமைப்பில், தாய் மொழி வழியில், பொதுப் பள்ளி முறைமையை உருவாக்கி, கல்வி உரிமை வழங்குதல், அனைவரும் உயர் கல்வி பெறும் வகையில் அரசு உயர்கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவது, அதன் எண்ணிக்கையைத் தேவைக்கேற்ற வகையில் அதிகப்படுத்தி, சமூகநீதியின் அடிப்படையில் கல்வி பரவலாக்கப்பட, "தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை" உருவாக்கத்திற்கான குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும்.
- சட்டப் பேரவை தேர்தல் முடிந்துள்ள சூழலில், புதியதாக பொறுப்பேற்கும் அரசிற்கு தலைமை ஏற்கும் முதலமைச்சர், தான் பொறுப் பேற்றவுடன் இடும் முதல் கையெழுத்து 'தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு" அமைக்கும் அரசாணைக்கு வழி செய்யும் கையெழுத்தாக அமைய வேண்டும்.
- பள்ளிக் கல்வி, உயர் கல்வி, உயர் கல்வியில் தரத்தை வரையறை செய்தல், தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட கல்வியின் அனைத்து அம்சங்களும் மாநிலச் சட்டப் பேரவையின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வரும் வகையில் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் ஆகும்.