தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்க உள்ளன. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், பள்ளி வளாகம், வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக பள்ளி ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் 6,173 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 31,297 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, அதற்குரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதாலும், ஆசிரியர்கள், பெற்றோர் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் இணையதளம், திக் ஷா செயலில் அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.