தமிழ்நாடு பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சூர்யா, நீண்ட நாட்களுக்கு முன் பக்ரைன் நாட்டில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) பகிர்ந்தார்.
அதில், புர்கா அணிந்து இருந்த பெண்கள் இருவர், கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கீழே போட்டு உடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், அவர்களுக்கு ஏன் இந்த மதவெறி என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்கு முன் நடந்தது என குற்றஞ்சாட்டிய பல்வேறு தரப்பினர், அதை உடனடியாக நீக்க வலியுறுத்தினர்.
இதனிடையே, ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற வீடியோவை பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சூர்யா பகிர்ந்து வருவதாக, வழக்கறிஞர் மணிமாறன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.