சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் 22 லட்சத்து 22 ஆயிரத்து 810 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019இன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆக. 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு 10 லட்சத்து 95 ஆயிரத்து 410 ரூபாய் அபராதமும், அரசு மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 451 நபர்கள்மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 100 அபராதமும் மாநகராட்சி விதித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் கனமழை... விமான சேவை பாதிப்பு