சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு ஊழல் புகார், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வாக்குறுதி, நீட் விவகாரம், உள்ளூர் விவகாரம்... இதை நோக்கியே தேர்தல் பரப்புரை மேற்கொண்ட கட்சித் தலைவர்களின் பரப்புரைக்கான விடை வருகின்ற 22ஆம் தேதி தேர்தல் முடிவில் தெரியவரும்.
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் எனத் தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதிவரை பெறப்பட்டது. இதில் வேட்புமனுக்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 416 ஆகும்.
பெறப்பட்ட வேட்பு மனுக்களின் மொத்த விவரம்:
- மாநகராட்சி வார்டு உறுப்பினர் - 14,701
- நகராட்சி வார்டு உறுப்பினர் - 23,354
- பேரூராட்சி வார்டு உறுப்பினர் - 36,361
- மொத்த வேட்புமனு எண்ணிக்கை - 74,416
- வேட்பு மனுவைத் திரும்பப் பெற்ற வேட்பாளர்கள் போக மீதி - 57,778
- தமிழ்நாட்டில் மாநகராட்சி
- வார்டு உறுப்பினர்கள் - 1369
- நகராட்சி வார்டு உறுப்பினர்கள் - 3824
- பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் - 7411
மொத்தமாக 12,604 இடங்களைத் நிரப்புவதற்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 அன்று நடைபெறும். தேர்தலில் வெற்றிபெறுபவர்கள் மார்ச் 2ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.
மார்ச் 4இல் மறைமுகத் தேர்தல்
மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முதல் கூட்டம் நடைபெறும் நாளான மார்ச் 4இல் நடக்கும்.
தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளில் கூடுதலாக தொற்று தடுப்புப் பொருள்களான வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட 13 பொருள்கள் வழங்கப்படும்.
வாக்குச் சாவடிகள்
மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து ஆறாயிரத்து 793 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளர்களும், நான்காயிரத்து 324 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் இரண்டு கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்களும், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும், ஆயிரத்து 576 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் விவரம் இத்தேர்தல்களுக்கென 649 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ஆயிரத்து 644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலுக்கென சுமார் 80 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நோட்டா இல்லாத தேர்தல்
ஒரு வாக்குச்சாவடிக்கு நான்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்துவதற்காக பாரத மின்னணு நிறுவனத்தினரால் சுமார் 55 ஆயிரத்து 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control unit), ஒரு லட்சத்து ஆறாயிரத்து 121 (Ballot unit) வாக்குப்பதிவு கருவிகள் முதல்நிலை ஆய்வுமேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லாமல் வேட்பாளரின் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்
தேர்தல் நடைபெறும் இடங்களில் மாவட்டந்தோறும் கண்காணிப்புப் பணியில் ஒரு ஐஏஎஸ் அலுவலரும், சென்னையில் மூன்று அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பறக்கும் படையினரால் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 10 வரை ஒன்பது கோடியே 28 லட்சத்து 37 ஆயிரத்து 192 ரூபாய் மதிப்பிலான பணம், பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுக் கடைகளுக்கு விடுமுறை
வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிப்ரவரி 19 நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 22 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம், மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பிப்ரவரி 22 அன்று இணைப்பில் காணும் 268 மையங்களில் நடைபெற உள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 இடங்களில் வாக்கு எண்ணும் பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலுக்கான வார்டு வாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப் பட்டியல்களைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 11 மேயர் பதவிகள்
சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் எஸ்.சி.க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் எஸ்.சி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு ஊழல் புகார், நீட், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் என்ற வாக்குறுதியும், குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் என்னவாயிற்று என்று இபிஎஸ், ஓபிஎஸ் கேள்வி எழுப்பினர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டபோது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல் என்ற குற்றச்சாட்டை திமுக அரசின் மீது வைத்தார்.
திமுக சார்பில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி, கனிமொழி - குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் விரைவில் தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தனர்.
தமிழ்நாட்டிற்குத் தேவை மோடி ஆட்சி இல்லை, நல்லாட்சி, ஊழலற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் எனக் கமல் ஹாசன் தேர்தல் பரப்புரை செய்தார்.
நூதனமுறையில் வாக்குச் சேகரித்த தலைவர்கள்
- அண்ணாமலை, தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் சாலையோரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டுக்கொண்டிருந்த சமையலாளரிடம், 'நான் ஒரு தோசை சுடலாமா?' எனக் கூறி தோசை ஒன்றை ஊற்றினார்.
- பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ, பாஜக வேட்பாளர்களுடன் கடை ஒன்றில் நுழைந்து தேநீர் தயாரித்து அருந்தினார்.
- கமல் ஹாசன், சென்னை மந்தைவெளியில் தேர்தல் பரப்புரை வாகனத்தில் செல்லாமல், சாலையோரத்தில் நடந்துசென்று வாக்குச் சேகரித்தார்.
- அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்தும், கோலம் வரைந்தும், தேநீர்ப் போட்டுக் கொடுத்தும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் மரணம்
இதுவரை தமிழ்நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளதால் அந்த இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம். அனுசுயா இன்று காலை மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'தங்கமணிக்குச் சாவுமணி' - மாண்பை மீறி பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்