சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சனிக்கிழமை (ஆக. 28) நடைபெற்றது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது ஜனநாய மரபுக்கு எதிரானது. இச்சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துரோகம்... துரோகம்...
இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதிமுக அதனை வரவேற்று இருந்தால் ஏற்கனவே செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இருந்திருக்கும். ஆனால், அதிமுக வெளிநடப்பு செய்திருப்பது தமிழ்நாடு விவசாய மக்களுக்கு மீண்டும் செய்திருக்கக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
அதிமுக விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள கட்சியாக இருந்திருந்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ததில் இருந்தே அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு!