சென்னை: கல்லத்து கிராமத்தை சார்ந்த சிவகாமி அன்னை இந்திரா காந்தி அன்னை தெரசா மகளிர் குழுவைச் சேர்ந்த 34 பெண்கள் அவர்களின் குழுவில் வரும் லாபத்தை சேமித்து வைத்து முதல்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மகளிர் குழுவை சேர்ந்த 34 பெண்களும் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று (பிப்.3) சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் குழு தலைவர் மெர்ஸி, “நாங்கள் 20 வருடமாக மகளிர் குழு நடத்தி வருகிறோம். அதில் வரும் லாபத்தை சேமித்து வைத்து, வரும் பணத்தில் வருடம் வருடம் சுற்றுலா செல்வோம். அப்படி எங்கள் அனைவரது கனவும் நீண்ட நாள்களாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதே.
இதனால் கடந்த ஒரு வருடமாக சேமித்து வைத்த பணத்தில், தற்போது மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளோம். இங்கிருந்து மெட்ரோ ரயிலில் கடற்கரைக்குச் சென்று சுற்றிப் பார்க்க உள்ளோம்.
மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அனைவரும் கூலித் தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள் இவர்கள் விமானத்தை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்தவர்கள் தற்போது முதல் முறையாக விமானதில் பயணித்தது மகிழ்ச்சியாக உள்ளது. விமானத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கின. ஆனால் விமான பணி ஊழியர்கள் தமிழில் வழிமுறைகளை கூறினர்.
அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளோம், அதனால் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டுள்ளோம். மேலும் அடுத்தடுத்து விமானங்களில் வெளி மாநிலத்திற்க்கு சுற்றுலா செல்ல இருக்கிறோம்” தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடித்து ஆடும் ராகுல்... மீண்டும் அமர் ஜவான் ஜோதி!