உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர் கரோனா வைரஸ் ஊரடங்கால் தாயகம் திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனையடுத்து, கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் முலம் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு இதுவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து 7,332 பயணிகள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு கரோனா இல்லாமல் 14 நாள்கள் தங்கியிருந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு வந்தவர்களில் 165 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில், குவைத்தில் இருந்து வந்த இருவருக்கும், கத்தாரில் இருந்து வந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு இதுவரை நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும், 399 விமானங்களில் 27 ஆயிரத்து 598 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 20 பேருக்கு கரோனா தொற்று பாதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு அனுப்ப குடிபெயர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை!