சென்னை: கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இன்று முதல் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக, திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த அவசரப் பணிகளுக்கு இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இன்று (மே 17) காலை முதல், திருமணத்திற்காக செல்வோர் இ- பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, இ-பதிவு இணையதளத்தில் இருந்து திருமணத்திற்குப் பயணம் என்ற பிரிவு நீக்கப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அலுவலர்களிடம் விளக்கம் கேட்டபோது, திருமணத்திற்காக அதிக அளவிலான மக்கள் விண்ணப்பிப்பதாகவும், இதனால் அதிக மக்கள் வெளியில் வரக்கூடிய சூழல் இருப்பதால், அந்தப் பிரிவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.