சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நாளை (ஜன.23) முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் பள்ளி வாரியாக காலியாக உள்ள பணியிடங்களில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் கலந்தாய்வின் போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்தவுடன், அந்தப் பணியிடம் காலியாக காண்பிக்கப்பட்டு அவருக்கும் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்கள் அனைத்தும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் பெறப்பட்டது. அதனடிப்படையில் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் சரிபார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஒவ்வொரு பள்ளியிலும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விபரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் ஆசிரியர்கள் நேரடியாகவும் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு அளிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் ஜனவரி 24 ஆம் தேதி அன்று (மாவட்டத்திற்குள்) நடைபெறுகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தகுதியுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டும்.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு, ஒருங்கிணைந்த மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த அளவில் அனைத்து காலி பணியிடங்களும் கலந்தாய்வில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு பதவிக்கும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு அன்று காலையில் புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும். அது முடிந்த பின்னர் மாலையில் புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு, அங்கிருந்த மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வானது தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நடைபெறும். ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிரிந்து புதிய மாவட்டங்களில் பணிபுரிந்து விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அந்தந்த புதிய வருவாய் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் தெரிவு செய்யப்படும் மையத்திலேயே நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.