12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 27ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 200-க்கும் மேலாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கையை தேர்வுத் துறை அதிகரித்து அறிவித்துள்ளது. முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில் முதுநிலை ஆசிரியர்களும், உதவி விடைத்தாள் திருத்துபவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து அரசுத் தேர்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,
- சரியாக காலை 8.30 மணிக்கு மைய மதிப்பீட்டு முகாமிற்கு வர வேண்டும்.
- திருத்தும் பணிக்கு சிவப்பு நிற மையினை மட்டுமே மதிப்பீட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.
- உதவித் திருத்துநர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட உறையில் சரியான எண்ணிக்கையில் விடைத்தாள்கள் உள்ளனவா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
- மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளும் முன்னர் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா, விடைத்தாள்கள் ஒவ்வொன்றிலும் அனைத்து பக்கங்களும் உள்ளனவா? என்று சரிபார்க்க வேண்டும்.
- விடைத்தாளில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை முதன்மைத் திருத்துநர்களின் கவனத்திற்கு கொண்டுவராவிடில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு உதவித் திருத்துநரே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
- விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பெண்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- அனைத்து பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும், விடுபடாமல் முழுவதும் சரியாகத் திருத்தப்பட வேண்டும்.
- விடை எழுதாமல் வினா எண் மட்டுமே எழுதியிருந்தால் சிவப்பு மையினால் கோடிட வேண்டும்.
- உதவித் திருத்துநர் நிலையில் ஏற்படும் தவறுகள் விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் போன்றவற்றின்போது கண்டுபிடிக்கப்பட்டால், தாம் ஈடுபட்ட ரகசிய பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதற்கு உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண நிதி: அரசு பதிலளிக்க உத்தரவு