தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக ஆண்டு தோறும் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் தினமான இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்கள உட்பட 377 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "ஆசிரியர்களின் மணிதநேயம் நாட்டையும் மாற்றிக் காட்டும். முன்பு ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை தண்டிக்க முடிந்தது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களை சத்தம் போட்டு கூட கண்டிக்க முடியாத சூழ்நிலையில் ஆசிரியர் உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்களுக்கு டிசி கொடுத்து அரசுப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அப்படிப்பட்ட மாணவர்களையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறச் செய்கின்றனர். தற்போது முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்குவதற்கு முதலமைச்சரின் ஒப்புதல் பெற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது" என்றார்.