2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பின் சார்பில் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய மனு இன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், “2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 மதிப்பெண் பெற்றவர்கள், மாலை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் 130 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள், அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில மாவட்டங்களில் குறிப்பிட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே நாங்கள் இக்குற்றங்களை தெரிவிக்கிறோம். இதுகுறித்து அமைச்சரிடமும் கூறியுள்ளோம். எனவே, இம்முறைகேடு குறித்து முதலமைச்சர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அளிக்க நாங்கள் தயாராகவுள்ளோம் ” என்று கூறினார்.
இதையும் படிங்க: ’தேர்வு முறைகேட்டை விசாரிக்க மாநிலக் காவல் துறைக்கு அனுமதி இல்லை’ - திமுக வாதம்