சென்னை: முகப்பேர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர், ஸ்ரீதர். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரியிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பின்போது, பள்ளி மாணவியின் எண்களை ஆசிரியர் ஸ்ரீதர் பெற்று மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகப் பேசி வந்ததாகவும், மேலும் டியூஷன் எடுக்கும் இடத்திலும் ஸ்ரீதர் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதர் பள்ளி மாணவிகளை வெளியில் அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஸ்ரீதர் ஆபாசமாகப் பேசிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சையானது.
இதனையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி பள்ளிக்குச்சென்று தலைமை ஆசிரியர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தி பின், ஆசிரியர் ஸ்ரீதரை சஸ்பெண்ட் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் திருமங்கலம் அண்ணா நகர் மேற்கு பகுதியைச்சேர்ந்த வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர் ராமசாமி(44) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஸ்ரீதர் மீது போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி முன்பு கூடிய அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் ஆசிரியர் ஸ்ரீதருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ