கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகன் (55). இவர் கிண்டி மசூதி காலனியில் தங்கி அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம் போல் மோகன் தனது டீக்கடையை திறந்துள்ளார். டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்கும் போது, எதிர்பாராத வகையில் கேஸ் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோகன் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. வலியால் அலறித்துடித்த மோகன் எரிந்து கொண்டே கடையில் இருந்து சாலையை நோக்கி ஓடினார். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓடிப்போய் தீயை அணைத்து மோகனை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.
இது குறித்து கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் ஸ்டவ் பற்ற வைத்தவர் தீ பற்றி எரிந்து உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தண்டுவடம் பாதிக்கப்பட்ட பேரனுடன் தங்குவதற்கு வீடு இல்லாமல் பரிதவிக்கும் தம்பதி