சென்னை: சென்னையில் உள்ள மத்திய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு சம்மன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், அந்த வரி ஒரு கோடியே 87 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்தவில்லை. அதன்படி சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்புச்சட்டத்தின்படி, விசாரணைக்காக மார்ச் 10-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும். தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வர வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் மார்ச் 10-ம் தேதி இளையராஜா ஆஜராகவில்லை. இதனால், மார்ச் 28-ம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதையும் இளையராஜா தரப்பு கண்டுகொள்ளாத சூழலில், தற்போது அதே வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி, 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜாவுக்கு அனுப்பப்படும் இறுதி நோட்டீஸ் இது என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இளையராஜா ஐந்து பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் - இயக்குனர் அமீர்!