சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, ”நேற்று எங்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்துள்ளோம்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும், சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துதல், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளை திமுகவிடம் அளித்துள்ளோம்.
எங்களுக்கு தேர்தலில் போட்டியிட திமுக இடம் வழங்காதது வருத்தம் தான் என்றாலும், ஃபாசிசவாதிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்கிற அடிப்படையில் திமுகவிற்கு இத்தேர்தலில் ஆதரவளித்துள்ளோம்” என்றார்.
தமிமுன் அன்சாரி கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் அதனை ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வந்த தமிமுன் அன்சாரி, தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலில் தனித்து நிற்கிறதா தேமுதிக?