சென்னை: தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்காட்டி அதற்குத் தீர்வு வேண்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி மாணவர் அணி சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், மாணவர்களின் படிப்புக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்பு நடந்த காலங்களை தமிழ்நாடு அரசு கல்வி கற்ற காலமாக ஏற்க மறுப்பதும், படித்து முடித்து மருத்துவத் தகுதிச் சான்றோடு வரும் மாணவர்கள் இங்கே பயிற்சி எடுக்க (Internship) வாய்ப்பின்றி அடுத்த மாநிலங்களில் பயிற்சியெடுக்கும் அவலநிலையையும் குறிப்பிட்டது முக்கியமானதாகும்.
அரசு அறிவிப்பு
இந்நிலையில், தமிழ்நாடு அரசு, மாணவர்களின் கோரிக்கைகளுள் ஒன்றான தமிழ்நாட்டிலேயே பயிற்சி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. அதன் பொருட்டு, வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் தமிழ்நாடு மாணவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனைச் சந்தித்து தங்களுக்காக கோரிக்கை வைத்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
அத்துடன் விடுபட்ட இன்னொரு கோரிக்கையான, ஆன்லைன் கல்விக் காலத்தை மொத்தக் கல்விக்காலத்தில் இணைக்க மக்கள் நீதி மய்யம் அரசை வலியுறுத்தி அதைப் பெற்றுத்தரும் என்று மாணவர்களிடம் கமல் ஹாசன் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்