பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “பொங்கல் திருநாளுக்கு சென்னையில் இருந்து பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்காக வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரையும், வெளியூர் செல்லும் மக்கள் திரும்பி வருவதற்காக 16 முதல் 19 ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திராவிற்கும், கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்திற்கும், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூருக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரிலும் தற்காலிக பேருந்துகள் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
பொங்கலுக்கு செல்வதற்காக 29,213 பேருந்துகளும், திருநாளுக்குப் பின்பாக 25,488 பெருந்துகளும் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் முன்பதிவு செய்வதற்காக 17 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு பேருந்துகள் நல்ல தரத்துடன் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை. தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததன் காரணம் தெரியுமா?