சென்னை: ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் தேவைகள், விநியோகம் செய்வது தொடர்பாக வணிகர் சங்கத்தின் தலைவர் விக்ரமராஜா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரமராஜா, "தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், சில இடங்களில் தொற்று குறையாமல் உள்ளது. இச்சூழலில், ஊரடங்கை நீட்டிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருள்கள் மக்களின் வீடுகளுக்கு எவ்வாறு கொண்டு செல்வது, விநியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, சில அரசு அலுவலர்கள் வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளார்கள் என முதலமைச்சரிடம் தெரிவித்தேன். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறினார்” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஊரடங்கு நீட்டித்தால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை 50, 100, 200 ரூபாய் போன்ற தொகுப்பு பைகளாக வழங்கவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஊரடங்கு நேரத்திலும் தட்டுப்பாடு இன்றி, விலை ஏற்றம் இல்லாமல் பொருள்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் விக்ரம ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.