மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்தில், நாளொன்றுக்கு 299 ரூபாய் வீதம் ஊதியமென பணி வழங்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கப்பட்டு ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
நீர்நிலைகள், சாலைகள் சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு உணவு, குடிநீர் வழங்குதல், பிற பணியாளர்களின் குழந்தைகளை கவனித்தல் போன்ற பணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் கிடைக்கக்கூடிய பணத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு பணியாற்றிய 500-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளியானது.
அந்தச் செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு எடுத்துள்ளது. ஆணைய உறுப்பினரான துரை ஜெயச்சந்திரன், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியம் வழங்காதது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலருக்கும், இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் வீரர் தேர்வு