இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் கடந்த 8 ஆம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை இன்று, மதிமுக, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், பெரியாரிய மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டன.
அப்போது கண்டனக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஈழமக்களுக்காக கட்சி, மதம், சாதி கடந்து நாம் ஒன்றிணைவோம். இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் என்னை காவல்துறை கைது செய்யலாம். என்னால் முடியாமலும் போகலாம். ஆனால், என்னைவிட சக்தி வாய்ந்த, துடிப்பு மிக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் வருங்காலத்தில் வந்து இலங்கை தூதரகத்தை சென்னையில் இருந்தே வெளியேற்றுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “சிங்கள இனவாத அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இங்கு முற்றுகை போராட்டம் நடக்கிறது. தமிழர்களை அழிப்பதற்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிங்கள அரசிற்கு தக்கபாடம் புகட்ட தயாராக வேண்டும்” என்று கூறினார்.
மேலும், கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிகவின் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குமரன், தமிழ் புலிகள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருவிதாங்கூர் மன்னருக்கு கைது வாரண்ட்! - நீதிமன்றம் எச்சரிக்கை!