தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு வரை 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக உலக வங்கி, 1,999 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசு 857 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளன. அதன்படி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட முடியும். தமிழகத்தில் சுகாதார வசதியின் தரத்தை மேம்படுத்துதல், தொற்றாத நோய்களின் சுமையைக் குறைத்தல், குழந்தை பிறப்பு தள்ளிப் போவதை சரி செய்யும் சிகிச்சை மற்றும் குழந்தைகள் சுகாதார சேவைகளில் உள்ள இடைவெளியை நீக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
சுகாதாரத்தில் இன்னும் 15 ஆண்டுகளில் செய்யக்கூடிய திட்டத்தை, தமிழ்நாடு அரசு 6 மாதங்களில் செய்துள்ளது என்றும், ஏழை எளிய மக்களுக்கு சர்வதேச தரத்திலான சுகாதார சேவை வழங்கும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் நலவாழ்வு துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதை எடுத்துக்கூறிய பன்னீர்செல்வம், இந்த புதிய திட்டத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிகிச்சையின் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
மருத்துவத்துறையில் புகழ் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் 53.78 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை அரசு உயர்த்தியுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு விருது பெற்று வருகிறது. கிராம மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க உயர்தர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மிகுந்த அற்பணிப்புடன் சேவையாற்றி வரும் தமிழ்நாட்டு மருத்துவர்கள், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரசிற்கு மருந்து கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினால் 'மாண்புமிகு' ஆகப்போகும் 'அவர்கள்' குறித்து ஒரு பார்வை!