தமிழ்நாட்டில் கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை போதுமானதாக இல்லாததால் சென்னையில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் இதர நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக இன்னும் 5 மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை நிறைவு செய்யமுடியும் எனத் தெரிகிறது. இதனால் கோடைக்காலம் மத்தியில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நீரியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, இன்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை நேரில் அளித்தனர்.
அக்கடிதத்தில், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஆந்திர அரசு போதிய ஒத்துழைப்பை வழங்கி, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உதவ வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, சென்னைக்கு கூடுதலாகத் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் முதலமைச்சர் பழனிசாமி!