ஜெம் என்றழைக்கப்படும் அரசு இணைய கொள்முதல் சந்தை மூலமாக, அரசு துறைகள் மற்றும் அது தொடர்புடைய தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும். இந்த இணையதளம் தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை அரசின் இணைய கொள்முதல் சந்தைக்கு கொண்டுவரும் ’ஜெம் சாம்வாத்' நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ” தமிழ்நாட்டில் தற்போது சுமார் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. ஆனால், 3 லட்சத்துக்கும் குறைவான நிறுவனங்கள்தான் அரசு இணைய கொள்முதல் சந்தையைப் பயன்படுத்தி, தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றன. இதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதனை பயன்படுத்துவதும் எளிமையானது. எனவே சிறு, குறு நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ” என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கடலூர் பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு ஆலை 2007ஆம் ஆண்டிலிருந்தே இயங்கி வருகிறது. இந்த ஆலை வேளாண் தொழிலை பாதிக்காது. இதன்மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு கிடைக்கிறது. 5,000 பேருக்கு நேரடியாகவும், 20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் அந்தப் பகுதியில் ஏராளமான சிறு, குறு நிறுவனங்களும், பெட்ரொலியத் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களும் வளர்ச்சி பெறும்.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட 59 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள தொழில் நிறுவனங்கள், செயல்பாட்டை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தொழில்துறை முதன்மைச் செயலர் முருகானந்தம், சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கடலூரில் பெட்ரோ கெமிக்கல் ஆலை - முதலமைச்சர் ஆலோசனை!