உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைவிதிக்கக்கோரி திமுக, அதன் தோழமைக் கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில், 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
"உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. ஜெயலலிதா இருக்கும்போதே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணியற்ற திமுக, மீண்டும் பழைய பல்லவியை பாடிக்கொண்டிருக்கிறது. தற்போது திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் குட்டு விழுந்துள்ளது.
திமுகவிற்கு திராணி, தில்லு, தைரியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கொல்லைப்புறமாக இந்தத் தேர்தலை நிறுத்த முயற்சி செய்வது பலனளிக்காது. திமுகவின் இன்றைய நிலை மூக்கு அறுந்த சூர்ப்பனகை போல் உள்ளது. தோல்வி பயத்தால் திமுக ஐநாவுக்குச் செல்லாமல் இருந்தால் நல்லது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியால் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது அதிமுக அரசின் நிலைப்பாடு. இதற்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!