சென்னை: கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஏழு மாதங்களுக்கு பிறகு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காததாலும், நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று(ஏப். 24) இரவு 10 மணி முதல் திங்கள் காலை 4 மணி வரை முழு ஊரடங்கும், ஏப். 30 வரை இரவு நேர ஊரடங்கும் அமலில் இருக்கும். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழ்வருமாறு காணலாம்.
- பெரிய கடைகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி இல்லை
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை
- உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. அமர்ந்து உண்ண அனுமதியில்லை
- சென்னை உள்பட மாநகராட்சி நகராட்சிகளில் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை
- அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது
- தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி
- பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை
- திருமணம் அல்லது திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிப்படும். அதே நேரம் இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும்.
- புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
- பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்களை கொண்டு குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப்படும்
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம் 50 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்
- வாடகை வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி கை கழுவுவுதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால், நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.