அண்மைக்காலமாக விழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது, அங்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக விழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்ந்த தரமான நடவுச்செடிகள், பழச்செடிகளை குறைந்த விலையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் (டான்ஹோடா) 63 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளும் 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மலைவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரச்செடிகளும், மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்களின் நடவுச்செடிகள், விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்தும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ. 10 வரையிலும் வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ. 30 வரையிலும் விற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் 2019-20ஆம் ஆண்டு மட்டும் 4,56,930 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மரக்கன்றுகள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி பயனடையலாம். சென்னையில் மாதவரம், செம்மொழிப் பூங்கா, அண்ணா நகர், திருவான்மியூர், கே. கே. நகர் ஆகிய இடங்களில் பெற்று கொள்ளலாம். இது தவிர இ-தோட்டம் செயலி வாயிலாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை ‘http://tnhorticulture.tn.gov.in/horti/’ என்ற இணையதள முகவரிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் - நாளை தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்