சென்னை: பொதுப் போக்குவரத்தில் ஜிபிஎஸ் பொருத்துவதில் தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடி ஊழல் செய்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை சர்வதேச சாலைப் பாதுகாப்பு வல்லுநர் கமல் சோய் முன்வைத்துள்ளார்.
சர்வதேச சாலைப் பாதுகாப்பு வல்லுநர் கமல் சோய் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் 2012ஆம் ஆண்டு, இளம்பெண் பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிலுள்ள டாக்சி, பேருந்து, அவசர ஊர்தி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில், அபாய கால உதவி பொத்தானுடன் இருப்பிடத்தைக் கண்டறியும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பல மாநிலங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறது. வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வெளிப்படையாக ஒப்பந்தப் புள்ளி கோராமல், தன்னிச்சையாக சில நிறுவனங்களுக்கு மட்டும் இந்தப் பணியை வழங்கியுள்ளது.
முதலில் எட்டு நிறுவனங்களுக்கும், பின்னர் 11 நிறுவனங்களுக்கும் இந்தத் திட்டத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஊழலுக்கான முகாந்திரம் உள்ளது.
எத்தனை கோடி ரூபாய் முறைகேடு நடைபெறுகிறது என்பதைச் சரியாகக் கூற முடியாவிட்டாலும், ஒரு ஜிபிஎஸ் கருவி பொருத்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால், அதன்படி தமிழ்நாட்டிலுள்ள பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவதில் ஆயிரம் முதல் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது.
பெரு நிறுவனங்களால் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுவரும் புதிய வாகனங்களிலும்கூட அவை அகற்றப்பட்டு புதிய ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், ஜிபிஎஸ் கருவி வாகனங்களில் இணைக்கப்பட்டாலும், வாகனங்களை மொத்தமாக கண்காணிக்க கண்காணிப்பு மையம் ஏதும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஜிபிஎஸ் கருவியும், அபாய பொத்தான்களும் இருந்தும் எந்தப் பயனும் இல்லாமல் உள்ளது.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசு விதித்த பல்வேறு விதிமுறைகள் அப்பட்டமாக மீறிவருகிறது. இதன்மூலம் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இது குறித்து, அரசு அலுவலர்களும் உரிய பதிலளிக்கவில்லை, அடுத்தகட்டமாக சிபிஐ, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பேன்" என்று கூறினார்.