பா.ம.க, ராமதாஸ், ஆந்திரா, வேலைவாய்ப்பு, உள்ளூர் மக்கள், தனியார் நிறுவனங்கள்இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது என்று சொன்ன ராமதாஸ், ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத் துறை நிறுவனப் பணிகள் வட இந்தியர்களால் பறிக்கப்பட்டுவிட்டதற்கு வேதனை தெரிவித்த அவர், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தினார்.