சென்னை: ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த தனி நிதிநிலை அறிக்கையில், கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும், அந்த கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம் கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள் எனவும், சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்யப்பெற்ற கரும்பு விவசாயிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை உற்பத்தி செய்து, ஆலைகளில் வழங்கிய கரும்புக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த கரும்பு ஆலைகளில் விவசாயிகள் கரும்பு வழங்கிய விவரம், ஆதார் எண், வங்கிக் கணக்கு புத்தகம், கரும்பு வாங்கியதற்கான ரசீது, நில விவரம் ஆகியவைகளை இதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'