சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையின்படி, திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், திருக்கோயில்களில் வழிபடும் பக்தர்கள் வழிபடும் கோயிலின் ஆகமத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு திருக்கோயில் ஆகமத்தை ஆவணப்படுத்தி தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யது புத்தகங்களாக பதிப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
குடமுழுக்கு நடைபெறும் தருணங்களில் பாடப்படும் சமய சான்றோர்களின் பாடல்கள் மற்றும் சாத்திர நூல்களை புத்தகமாக வெளியிடுவதற்கும், இப்பணிகளுக்குத் தேவையான துறை அலுவலர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளை பெற்று செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் (செப்.18) ஆம் தேதி அன்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை இராமானந்த குமரகுருபர சுவாமிகள், ஆகம அறிஞர் சக்திவேல் முருகனார், சொற்பொழிவாளர் சுகிசிவம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா ஆகியோரை கொண்ட கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்ட நடவடிக்கைகளின்படி தமிழில் மந்திரங்களை ஓதி, திருக்குட நன்னீராட்டு நடத்திவரும் அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கோருவதென முடிவு எடுக்கப்பட்டது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிப்பேராணை மனு (ம.கி) எண்.1915/2020–ன் உத்தரவின்படி,
“இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் சமஸ்கிருதம் மட்டுமின்றி ஒரே சீராக தமிழிலும் திருக்குடமுழுக்குகள் நடத்திட வேண்டும். அதற்கு ஏதுவாக தமிழ் ஆகம முறைப்படி திருமுறை (சைவ கோயில்கள்), பிரபந்த (வைணவ கோயில்கள்) மந்திரங்களை ஓதி திருக்குட நன்னீராட்டு விழா நடத்திவரும் அமைப்புகள், தங்களின் செயல்முறைகளை விளக்கங்களுடனும் இதுவரை நடத்திய நிகழ்வுகளுக்கான சான்றுகளுடனும் தங்களது கருத்துகளை இணைத்து ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென” அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு