தஞ்சாவூர் மாவட்டம் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் 31.37 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த நிலத்தை பல்கலைக்கழக விரிவாக்கத்திற்கு வழங்க வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 31.37 ஏக்கருக்கும் மாற்று இடம் தருவதாகவும் அல்லது சந்தை மதிப்பிலான விலைக்கு பணம் கொடுப்பதாகவும் கோரிக்கை தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்தது.
இதனால் பல்கலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்து நிலத்தைக்கோரியது. அந்த வழக்கில் நீதிபதி சி.வி கார்த்திகேயன் அரசின் முடிவை உறுதி செய்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து பல்கலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே தமிழ்நாடு அரசு நிலத்தை கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழு, 31.37 ஏக்கர் நிலம் சிறைச்சாலை அமைக்க தேவைப்படுவதால், யாருக்கும் கொடுக்க வேண்டாம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு, ஆக்கிரமிப்பு நிலத்தை 4 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று பல்கலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்தும் பல்கலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, சக்திகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து, 31.37 ஏக்கர் நிலம் சிறைச்சாலை அமைக்க தேவைப்படுவதால், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்கலை சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதனையேற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதலாக 2 நீதிபதிகள் நியமனம்