சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் இந்த விசாரணையைக் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கை, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆகியோர், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது உள்நோக்கத்தோடும், பொய்யாகவும் புகார்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் முதற்கட்ட விசாரணை நடத்தப்படுவது நடைமுறை எனவும், அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் வாதிட்டனர்.
திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், வேண்டுமென்றே முதற்கட்ட விசாரணையை தாமதப்படுத்தி, பின்னர் வழக்குப்பதிய முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பதே அரசின் நோக்கமாக இருப்பதாகவும் வாதிட்டார்.
இதனையடுத்து, ஆரம்பக்கட்ட விசாரணை நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்படுகிறதா? அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி நடத்தப்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஐம்பதாண்டுகால வளர்ச்சியை 5 வருடத்திலே தந்துள்ளோம் - எஸ்.பி.வேலுமணி