சென்னை: திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், "பரப்பிக்குளம் ஆழியாறு திட்ட திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரப்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 03.08.2021 முதல் 135 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு ஐந்து சுற்றுகளாக மொத்த 9500 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள 94ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மீனவர்கள் பாதுகாப்பில் அண்ணாமலை வீண் பெருமை - ஆளூர் ஷா நவாஸ் ஆவேசம்
அதேபோல, திருப்பூர் மாவட்டம் தளி வாய்க்கால் வடபூதி நத்தம் கிராம நீரினைப் பயன்படுத்துவோர் நலச் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையினை ஏற்று, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்குத் திருமூர்த்தி அணையிலிருந்து 03.08.2021 முதல் 31.05.2022 வரை 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.