தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக்குழு ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்தும், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பின்னர், மருத்துவப்படிப்பில் அதிகளவில் சேர்வதற்கு எத்தனை விழுக்காடு இடத்தை ஒதுக்க வேண்டும் எனவும், ஆய்வு செய்து வருகிறது. அதேபோல், கல்வியாளர்களிடமும் இக்குழு கருத்து கேட்டுள்ளது.
இந்த குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலையடுத்து பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து அறிக்கை அளிக்க முடியவில்லை.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு அளிக்க வேண்டிய இட ஒதுக்கீடு குறித்து அமைக்கப்பட்ட குழுவின் காலத்தை, 15 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிடுகிறது. எனவே, இக்குழு 15 நாட்களில் அறிக்கை தயாரித்து அரசிடம் அளிக்க வேண்டும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’தேர்வு மையங்களுக்குத் தெர்மல் ஸ்கேனர் இயந்திரங்கள்’