திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்த நிலையில், தற்போது உடுமலைப்பேட்டை தாலுகா, பண்ணைக்கிணறு கிராமத்தில் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகள், சேலம் மாவட்டம் தலைவாசல், தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமம் ஆகிய இடங்களில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், சென்னை, கொடுவள்ளியில் உள்ள பால் தொழில்நுட்பம், ஓசூர் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி ஆகியவற்றில் நடப்பு கல்வியாண்டிற்கான (2020-2021) பி.வி.எஸ்.சி (Bachelor of Veterinary Science), ஏ.எச் (Animal Husbandry) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள பண்ணைக்கிணறு கிராமத்தில் 255.87 கோடி ரூபாய் செலவில், 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்து ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் 40 மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கி நடைபெறும் என்றும் பின்னர் தேவைக்கு ஏற்ப 80 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஆக. 18) சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விண்ணப்பித்த 99.81 விழுக்காடு நபர்களுக்கு இ-பாஸ்: விவரம் வெளியிட்ட மாநகராட்சி!