தமிழ்நாடு சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. அப்போது வெளியிடப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், “மீன்பிடி தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 2019-20ஆம் ஆண்டில் 13 கடலோர மாவட்டங்களைச் சார்ந்த 1,63,491 மீனவக் குடும்பங்களுக்கு, 81.75 கோடி ரூபாய் தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் வழியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதேபோல் மீன்பிடி குறைவு காலத்திலும் ஐந்தாயிரம் ரூபாய் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. 2019-20ஆம் ஆண்டில் ரூ. 88.41 கோடி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 15ஆம் தேதி வரை 11 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,30,133 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.65.07 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படும் - அரசு தகவல்