தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், மொத்தம் 2081 நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் 22,08,786 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 3,71,353 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யும் பொருட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
சென்றாண்டு மொத்த கொள்முதல் அளவைக் காட்டிலும் இன்றைய தேதியிலேயே கூடுதலாக 20% நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கே.எம்.எஸ் 2019-2020-ஆம் ஆண்டு பருவத்தில் மொத்தம் 28 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாக அமையும். மேலும், மத்திய அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையுடன், அரசின் ஊக்கத் தொகையும் சேர்த்து வழங்கப்படுவதாலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைத்து, வங்கிகள் மூலம் கடன் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்றளவில் இக்கிடங்குகளில் சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கிடங்கு கொள்ளளவு வசதி இருப்பதால், விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: திறக்கப்படாத கடைகள்... சென்னை எப்படி இருக்கு?