சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 30ஆம் தேதி வெளியிட்டுள்ள கரோனா குறித்தான புள்ளி விவரத் தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாகக் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 77 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 22,237 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என 22,238 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 722 நபர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 33 லட்சத்து 25 ஆயிரத்து 940 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 926 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
26 ஆயிரத்திற்கும் மேல் குணமடைந்தனர்
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 26 ஆயிரத்து 624 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 470 என உயர்ந்துள்ளது.
மேலும் அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகள் சிகிச்சைப்பலனின்றி தனியார் மருத்துவமனையில் 23 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும், மனநல காப்பகங்களில் 38 நோயாளிகளும் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 544 என உயர்ந்துள்ளது.
அதிகம் பாதித்த நகரங்கள்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3998 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 2765 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 1534 நபர்களுக்கும், ஈரோட்டில் 1127 நபர்களுக்கும், சேலத்தில் 1181 நபர்களுக்கும் மற்றும் திருப்பூரில் 1497 நபர்களுக்கும் என அதிக அளவில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 17.3 விழுக்காடாக உள்ளது. புதிய பாதிப்பு எண்ணிக்கை விகிதம் குறைந்து வருவது இதன் மூலம் தெரிகிறது.
ஆனால், அதே நேரத்தில் திருப்பூரில் 5,678 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 1,649 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நோய்ப்பரவல் விகிதம் 29.1 விழுக்காடாக உள்ளது. சென்னையில் புதிய பாதிப்பு 18.3 விழுக்காடாகவும், கோயம்புத்தூரில் 26.2 விழுக்காடாகவும் உள்ளது. மாநிலம் முழுவதும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இதையும் படிங்க:நாட்டில் புதிதாக 2,34,281 பேருக்கு கரோனா