டெல்லி செல்லும் முன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,
’’ ப. சிதம்பரத்திற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக சிதம்பரத்தை பணிய வைக்க 106 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள். இந்த நாட்களில் 10 லட்சம் கேள்விகளைக் கேட்டிருந்தால் கூட சிதம்பரம் பதிலளித்திருப்பார். அவரிடம் கேள்வியும் கேட்க மறுக்கிறீர்கள். வெளியே விடவும் தயங்குகிறீர்கள் என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் கூறினார்.
ஆகவே, சர்வாதிகாரம் நீடித்ததாக வரலாறு கிடையாது. இந்த தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய 3 பேரில் சிதம்பரமும் ஒருவர். ஆனால், மோடி அரசு பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது ’’ என்று கூறினார்.மேலும்,
” உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருக்க, சட்டத்தில் என்னென்ன ஓட்டைகளை செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் அதிமுக அரசு செய்துள்ளது. மறைமுகத் தேர்தல், ஆள் தூக்கும் தேர்தலாக முடியுமே தவிர, மக்களாட்சியாக இருக்காது.
புதிதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்பட்டு அவற்றில், தொகுதி வரையறை செய்யப்படவில்லை. அங்கே, மாவட்ட ஆட்சித்தலைவர் இருப்பார். ஆனால், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் இருக்க மாட்டார். புதிய மாவட்டங்களில் தொகுதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்றால், மத்திய அரசு அனுப்பும் பணம் புதிய மாவட்டங்களுக்கு எப்படிச் செல்லும். இதுபோன்ற சட்ட சிக்கல்களுடன் தேர்தலை நடத்த அரசு முயற்சிக்கிறது. இது தவறு என்பதால்தான் நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவே திமுக போராடி வருகிறது ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தயார்' - துணை முதலமைச்சர்