காங்கிரஸ் தலைமைச் செயலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “முன்பெல்லாம் மசோதாக்களைக் கொண்டு வரும் முன்பு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டு விவாதிக்கப்படும். ஆனால் தற்போதைய ஆட்சியில், இணையதளத்தில் இரவு பதிவு செய்து காலையில் மசோதா கொண்டு வருகிறார்கள். அதைப்பற்றி விவாதிக்கக் குறைந்த நிமிடங்களே தரப்படுகிறது. அவர்கள் மனதில் தோன்றியதை பாஜக அரசு நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியச் சரித்திரத்தில் ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறியது இல்லை. பாஜகவைக் கண்டு அஞ்சி அரசியல் நிலைப்பாட்டை ஒருசில கட்சிகள் மாற்றிக்கொள்கிறார்கள். காக்கா வெள்ளை என்று இரவு முடிவு செய்து மறுநாள் பாஜக அரசால் சட்டம் இயற்ற முடியும். அப்படிதான் அவர்கள் செயல்பாடு உள்ளது.
பொருளாதார ரீதியில் காஷ்மீர் வளர்ச்சி அடையாததற்குக் காரணம் 370 என்று கூறுவது பொய். இந்தியை எதிர்ப்பதால் தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றி பாஜக இந்தியைத் திணிக்கலாம்” என்றார்.