சென்னை: ' 'ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம்' என்ற வகையில் ஒரே கல்விமுறையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறார்கள், அராஜகமான அடாவடித்தனமான ஆட்சியை பாஜக நடத்துகிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான, சட்ட முன்வடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம்
இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், 'ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத் தான் செயல்பட முடியும். வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு 15 நிமிடத்தில் ஒப்புதல் வழங்கும் ஆளுநரால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவை மாதக்கணக்கில் இழுத்தடிப்பது ஏன்?
மேலும் மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாம் என்ற நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்த பின்னரும் அதற்கெதிராக மருத்துவக் கல்வி சட்டத்தை ஒன்றிய அரசு திருத்தி உள்ளது.
மருத்துவத்தில் இந்தியாவின் தலைநகரமாக சென்னை விளங்கி வருகிறது. நீட் தேர்வு இல்லாமல் மருத்துவம் படித்தவர்கள் சிறந்த மருத்துவர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றபோதும் அதனால் மருத்துவர்களின் தகுதி உயரும் என்பது ஏமாற்று வேலையாகும்.
சிறுபான்மை மாணவர்களுக்கு எதிரானது நீட்
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. நீட் தேர்வு என்பது மேலும் இந்த தீர்ப்புக்கு எதிரானதாக உள்ளது.
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களை மருத்துவ கல்விக்குள் செல்லாமல், நீட் தடுக்கிறது. தனியார் பயிற்சி நிலையங்களுக்குப் பயனளிப்பதாக நீட் அமைந்துள்ளது.
மேலும் பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வைக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காகத் தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கூறுவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற வகையில் ஒரே கல்வி முறையைக் கொண்டுவர பாஜகவினர் முயற்சிக்கின்றனர்.
அராஜகமான அடாவடித்தனமான ஆட்சியை பாஜக நடத்துகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அனைவரும் ஒன்றுபட்டு மாணவர் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடுவோம். ஆகவே, தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:திருப்பூர் இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!