சென்னை: சென்னை வேப்பேரி பெரியார் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 2021 விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
மேலும் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ். பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் விழாவில் முக்கியப் பங்காற்றினர்.
ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர்
இவ்விழாவில் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர், பி.வி. கரியமாலுக்கு அயோத்திதாசன் ஆதவன், பஷிர் அகமதுக்கு காயிதே மில்லத் பிறை, மொழியியலாளர் க. ராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து பேசிய மு.க. ஸ்டாலின், "அம்பேத்கர் விருதை வாங்குவதில் எனக்குச் சற்று தயக்கம் இருக்கிறது. இதற்கான சாதனைகளை இன்னும் செய்யவில்லை. என் கடமையைத்தான் செய்துவருகிறேன். திட்டங்களை இன்னும் உருவாக்கித்தர வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். அம்பேத்கர் சுடர் விருதை தொண்டர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
1987ஆம் ஆண்டு ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தேன். சீர்திருத்தவாதியாகச் செயல்படக்கூடிய நந்தகுமார் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் போராடக்கூடியவனான நான் அந்தப் பாத்திரத்தில் வருவேன். இறுதியாக நான் தாக்கப்படும்போது ‘ஒரு போராளியின் பயணம் இது. அவன் போராடி பெற்ற பரிசு இது’ என்ற பாடல் வரும்.
திராவிட சரித்திரத்தின் தொடர்ச்சிதான் இது!
அந்தப் பாடலை எழுதியது கருணாநிதி. இந்த விருதைப் பெறும்போது அதைத்தான் நான் நினைத்துப் பார்க்கிறேன். பெரியார் திடலில் அம்பேத்கர் விருதைப் பெற்றதே போதும். மராட்டியத்தைவிட திராவிடம்தான் அம்பேத்கரின் கொள்கைகளைப் பெருமளவில் பரப்பியது. அம்பேத்கருக்குப் பிறகு அவர் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது என்று சொன்னவர் பெரியார்.
ஆதி திராவிடர் நலத் துறை, இடஒதுக்கீடு, வீட்டுவசதிக் கழகம், மாணவர்களுக்கு இலவச நூல், மாணவர் இல்லங்கள், விடுதிகள், உழவு மாடுகள் வாங்க கடன், தரிசு நிலங்களை வழங்கியது, தீண்டாமை குற்றங்களைக் கண்காணிக்கக் குழு, அம்பேத்கர் பெயரில் விருது, நூற்றாண்டு விழா, சமத்துவபுரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இவை அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர்தான் கருணாநிதி.
அந்த திராவிட சரித்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்போது நடக்கும் ஆட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. விழிப்புணர்வு கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், கல்வி வேலைவாய்ப்பில் பட்டியலின மக்கள் உரிய இடங்களைப் பெற்றாக வேண்டும். சமூக அமைப்பில் அவர் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது. அவர்கள் வளர்ச்சி சாதியைக் காரணம் காட்டி தடுக்கப்பட்டுவிடக் கூடாது.
வைகோ, திருமா இந்த நாட்டிற்குத் தேவை
சமூக நல்லிணக்கம், சமூக சமநிலை இல்லாத ஒரு மாநிலத்தில் மற்ற வளர்ச்சிகள் அனைத்தும் வீண் முயற்சிதான். பரப்புரை மூலம் உருவாக்க வைகோ, திருமாவளவனை போன்றவர்கள் இந்த நாட்டிற்குத் தேவை" எனக் கூறினார்.
திருமாவளவன் பேசுகையில், அனைவராலும் போற்றப்படுகின்ற முதலமைச்சர் இன்று அம்பேத்கர் சுடர் விருதைப் பெறுவது லட்சோப லட்சம் விசிகவினருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்: மீட்க வலியுறுத்தி மீன்வளத் துறை அமைச்சரிடம் மனு