சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின், 33 அமைச்சர்கள் ஆகியோர் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மே 9) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நேற்று அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு தனியாக அறிவுரை வழங்கியுள்ளார். அதில், "காவல் துறையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதன் அமைச்சரான தன்னையோ அல்லது தனது முதலமைச்சர் அலுவலகத்தையோ தொடர்புகொள்ள வேண்டுமே தவிர நேரடியாக காவல் துறை விவகாரங்களில் தலையிடக் கூடாது" என ஸ்டாலின் கண்டிப்புடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் தங்களின் உதவியாளர்களை நியமிக்கும்போது எவ்வித சச்சரவுக்கும் ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை சார்ந்தவர்களின் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். எந்த வகையிலும் அரசிற்கு கெட்டபெயர் ஏற்படும் வகையில் எந்த அமைச்சரும் செயல்படக்கூடாது. அமைச்சர்கள் தவறு செய்யும்பட்சத்தில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்” என எச்சரித்தார்.
இதையும் படிங்க: ’மோடி அரசின் அலட்சியத்தின் விலையை இந்தியா சுமக்கிறது’