மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ’அட்சய பாத்திரா’ அமைப்பின் சமையலறை பூமி பூஜை விழா, சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி உரையாற்றினர்.
இந்த சமயலறை சென்னையில் மாணவர்களுக்காக உணவு தயாரிக்கும் இரண்டாவது சமயலறையாக இருக்கும். இதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய விருப்ப நிதியிலிருந்து 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதனால் மாநகரிலுள்ள 35 மாநகராட்சி பள்ளிக்கூடங்களைச் சார்ந்த 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இதற்கு முன்னதாக அட்சய பாத்திரா செயல்திட்டமானது, திருவான்மியூரில் உள்ள சமயலறை மூலம் 16 பள்ளிக்கூடங்களில் பயிலும் 5,090 மாணவர்களுக்கு தற்போது உணவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ”தமிழ்நாட்டில் 42,783 பள்ளிகளில் தினந்தோறும் சத்துணவு வழங்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 16,771 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சத்துணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அட்சய பாத்திரா அறக்கட்டளை ஏற்கெனவே 5000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு அளித்து வருவது பெருமையளிக்கிறது. அட்சய பாத்திரா நிறுவனத்திற்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்” என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மக்களின் பசியைப் போக்க பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மேலும் இரண்டு சமையல் கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அவற்றிற்கு குடிநீர், மின்இணைப்பை மாநகராட்சியே செலுத்தும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இன்றுடன் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த நாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆளுநர் பல்வாரிலால் புரோகித் பேசுகையில், “பிப்ரவரி 2019இல் என்னால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் சிறப்பாக இயங்கிவருகிறது. என் சொந்த ஊரான நாக்பூரில் கூட இந்தத் திட்டம் இயங்கி வருகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காலை உணவு அத்தியாவசியமான ஒன்று. 13 மாநிலங்களில் இந்தத் திட்டம் சிறப்பாக இயங்கிவருகிறது. இந்தத் திட்டம் 101 சதவீதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக ஆலோசனைக் கூட்டம் - ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் பங்கேற்பு!