தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். இதன் அடிப்படையில் முதல்கட்டமாக 240 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 37 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரத்திற்கு 25, சேலத்திற்கு 10, கோவைக்கு 20, கும்பகோணத்திற்கு 35, மதுரைக்கு 5, திருநெல்வேலிக்கு 5 பேருந்துகள் என மொத்தம் 240 பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. சென்னை மாநகரத்திற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் குளிர்சாதன பேருந்துகளில் விமானத்தின் உட்புறத்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 2018-19ஆம் ஆண்டின் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத பிற மாவட்டங்களில் நடமாடும் பணிமனைகள் இயக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருச்சி, தஞ்சாவூரை மையமாகக் கொண்டு செயல்படும் 2 அம்மா அரசு நடமாடும் பணிமனைகள் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கும் அம்மா நடமாடும் பணிமனை அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், தஞ்சாவூரை மையமாகக்கொண்டு இயங்கும் அம்மா நடமாடும் பணிமனை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 1200க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்து, பழுதாகும் இடத்திற்கே சென்று சரி செய்திட ஏதுவாக, 3 பணியாளர்களை கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: தொடங்கியது விசாரணை