தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2020ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 9ஆம் தேதி வரை நடந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (பிப்.14) காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. அப்போது 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், 2021 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசால் இடைக்கால நிதிநிலை அறிக்கையையே தாக்கல் செய்ய முடியும். எனவே, அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் உரை முடிந்தவுடன் அன்றைய நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூடி, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கும். அதன்படி நாளை பேரவைக் கூட்டம் முடிந்ததும், மீண்டும் 17 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.
இதன் பின்னர் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டு, மானியக் கோரிக்கை மீதான துறை ரீதியான விவாதம் மார்ச் முதல் வாரம் தொடங்கி, 1 மாத காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
நாளைத் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்ட முறையில் மாற்றம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குடிமராமத்துப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும், புதிய மாவட்டங்கள், வட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து, தீர்மானம் கொண்டுவர வேண்டுமென திமுக சார்பில் பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முறைகேடு - ஆதார் ஆணைய உதவியை நாடிய சிபிசிஐடி!