சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாயாத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிசான் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி, பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், "தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக உறுப்பினர்கள் பேரவையை அலங்கரித்து உள்ளனர்.
சட்டப்பேரவையைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்.
அதே போல தவறுகளை சுட்டி காட்ட தயங்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய சி.டி ரவி, “அதிமுக எங்களோடு இணைந்து சிறப்பாக பணியாற்றினார்கள்.1300 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முருகன் வெற்றியை இழந்துள்ளார். இது தொடக்கம்தான். நாங்கள் தமிழ்நாடு மக்கள் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவோம்.
தாமரை மலர்ந்தே தீரும் என்றோம், தற்போது மலர்ந்துவிட்டது.1994ஆம் ஆண்டு கர்நாடகாவில் நான்கு பாஜக எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர், தற்போது அங்கு ஆட்சி எங்களிடம்தான் உள்ளது. தமிழ்நாட்டிலும் அது வெகு தொலைவில் இல்லை. தற்போது நான்கு எம்எல்ஏக்களை பெற்றுவிட்டோம்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின்னர், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், வி.பி துரைசாமி ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.